தானே கிரேன் விபத்து; பிரதமர் மோடி., முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நிதியுதவி அறிவிப்பு..!

மகாராஷ்டிராவில் மேம்பால பணியின்போது கிரேன் சரிந்து விழுந்து உயிரிழந்த 17 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே…

மகாராஷ்டிராவில் மேம்பால பணியின்போது கிரேன் சரிந்து விழுந்து உயிரிழந்த 17 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை – நாக்பூரை இணைக்கும் வகையில் விரைவு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தானே மாவட்டத்தின் ஷகல்பூர் பகுதியில் 3ஆம் கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மேம்பாலத்தின் பாகங்களை தூக்கி வைக்க ராட்சத கிரேன் எந்திரம் பயன்படுத்தப்பட்டது. அதிகாலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென கிரேன் எந்திரம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று இரவு 11 மணியளவில் நடந்த இந்த விபத்தினை நேரில் பார்த்த ஒருவர் கூறும் பொழுது “கிரேன் இயந்திரம் சரிந்து விழுந்தபோது நாங்கள் மறுபுறம் வேலை செய்து கொண்டிருந்தோம். இந்த சம்பவம் நடந்த நேரத்தில் சுமார் 30 பேர் அங்கு வேலை செய்து கொண்டிருந்தனர் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த மோசமான விபத்திற்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் வாயிலாக வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், மகாராஷ்டிராவின் ஷாபூரில் நடந்த பயங்கர விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். என்.டி.ஆர்.எஃப் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவி கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியை தொடர்ந்து விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த பின்னர், இந்த சம்பவத்தில் 3 பேர் காயமடைந்து தானேயில் உள்ள கல்வாவில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் ஷிண்டே அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் என அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். சம்ருத்தி மகாமார்க்கின் மூன்றாம் கட்ட பணியின் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேபோல் ஷாபூர் தாலுகாவில் உள்ள சம்ருத்தி நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் சில தொழிலாளர்கள் உயிரிழந்தது மிகுந்த வருத்தமும், மனவேதனையும் அளிப்பதாக மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார் . அவருக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். அவர்களது குடும்பத்தாரின் துயரத்தில் நாமும் பங்கு கொள்கிறோம். இதில் 3 தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த சம்பவம் குறித்து நிபுணர்கள் மூலம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

சம்ருத்தி மகாமார்க்;

இந்து ஹ்ருதய்சாம்ராட் பாலாசாஹேப் தாக்கரே மகாராஷ்டிரா சம்ருத்தி மகாமார்க் என்று பெயரிடப்பட்டது, இது மும்பை மற்றும் நாக்பூரை இணைக்கும் 701-கிமீ நீளமுள்ள விரைவுச்சாலையாகும். இது நாக்பூர், வாஷிம், வார்தா, அகமதுநகர், புல்தானா, அவுரங்காபாத், அமராவதி, ஜல்னா, நாசிக் மற்றும் தானே உள்ளிட்ட 10 மாவட்டங்களைக் கடந்து செல்கிறது. மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்தால் சம்ருத்தி மகாமார்க் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாக்பூரை கோயில் நகரமான ஷீரடியுடன் இணைக்கும் முதல் கட்டம், 2022 டிசம்பரில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இது 520 கி.மீ. இகத்புரி தாலுகாவில் உள்ள பர்வீர் கிராமத்தில் இருந்து ஷீரடி வரையிலான 80 கிமீ நீளமுள்ள சம்ருத்தி மகாமார்க் பாதையின் இரண்டாம் கட்டத்தை மே 26 அன்று முதலமைச்சர் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் மூன்றாவது மற்றும் கடைசி கட்டம் முடிவடையும் என்று மே மாதம் ஷிண்டே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.