நடிகர் கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்திற்காக ஷான் ரோல்டன் பாடிய பாடல் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை வாழ்வின் சிறந்த பாடல்களில் ஒன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
நடிகர் கார்த்தியின் 25-ஆவது திரைப்படமான ஜப்பான் திரைப்படம் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. ட்ரிம் வாரியர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடித்து வருகிறார். இயக்குனர் விஜய் மில்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் படமாக்ககப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பகுதியில் 200 குடில்கள் கொண்ட பிரம்மாண்டமான கிராமம் போன்று செட் அமைக்கப்பட்டு நடைபெற்ற இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இதையடுத்து இரண்டு பாடல்கள் மட்டும் படமாக்கப்படவுள்ளது.
இந்த வருட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் வெளியாக இருப்பதாக படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்திற்காக இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஒரு பாடலைப் பாடியுள்ளார். இதைக் குறிப்பிட்ட ஜி.வி.பிரகாஷ் குமார் ‘ஜப்பான் படத்தின் ஒரு மெலடி பாடலுக்காக ஷான் ரோல்டனின் அபாரமான குரலைப் பதிவு செய்தததில் மிகுந்த மகிழ்ச்சி. என் இசை வாழ்வின் சிறந்த பாடல்களில் ஒன்றாக இது இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.







