தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். பனை தொழிலாளியான இவர் கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜாவால் சுடப்பட்டார். இச்சம்பவம் மாநில அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மணிகண்டனின் தந்தை பெருமாள் சேட் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் “எனது மகன் மணிகண்டன், பனை மரம் ஏறி பதநீர் இறக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த ஏப்ரல் 7, 2026 அன்று ஆலங்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா மற்றும் போலீசார் சீருடை அணியாமல் பெருமாள் சேட்டின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அவர்கள் மணிகண்டனை பனைத் தோப்பிற்கு அழைத்துச் சென்று, மரத்தில் கட்டப்பட்டுள்ள பானைகளில் கள் உள்ளதா அல்லது பதநீர் உள்ளதா எனச் சோதிக்க கட்டாயப்படுத்தியுள்ளனர்.
மணிகண்டன் மரம் ஏறும்போது சார்பு ஆய்வாளர் அவரை சாதிப் பெயரை சொல்லித் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனை பெருமாள் சேட் மற்றும் அவரது பேத்தி பிரதீபா தட்டிக்கேட்டபோது, அவர்களையும் போலீசார் மிரட்டியுள்ளனர். மரத்திலிருந்து இறங்கி வந்து தடுத்த மணிகண்டனை, சார்பு ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டார். இதில் மணிகண்டனின் இரண்டு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த வழக்கை தமிழக போலீசார் விசாரணை செய்தால் எங்களுக்கு நியாயம் கிடைக்காது. எனவே இந்தச் சம்பவம் தொடர்பாகப் பதியப்பட்ட வழக்கை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்பிற்கு மாற்ற வேண்டும். மேலும் தற்போதுள்ள போலீசார் இந்த வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி வழக்கின் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் புதிய உத்தரவு பிறப்பிக்கும் வரை சம்பந்தப்பட்ட போலீசார் இந்த வழக்கை விசாரணை செய்யக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் இந்த வழக்கில் சிபிஐ மற்றும் காவல் துறை அதிகாரி இசக்கி ராஜா ஆகியோர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.







