தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்களின் உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. கோயில்களுக்குச் சொந்தமாக 4 லட்சத்து 78 ஆயிரத்து 272 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களின் உரிமை ஆவணங்களைச் சரிபார்க்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
கோயில் நிலங்களின் உரிமை ஆவணங்கள் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள “தமிழ் நிலம்” மென்பொருளோடு ஒப்பீடு செய்யப்பட்டு முழுவதும் ஒத்துப்போகும் இடங்கள், பகுதியாக ஒத்துப்போகும் இடங்கள் மற்றும் புதிய இடங்கள் என மூன்று இடங்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
அதன்படி, தற்போது முதற்கட்டமாக 3 லட்சத்து 43 ஆயிரத்து 647 ஏக்கர் நிலங்கள் முழுவதும் ஒத்துப்போகும் இடங்களாகக் கண்டறியப்பட்டு, அந்த நிலங்களின் ‘அ’ பதிவேடு, நகர நில அளவைப் பதிவேடு மற்றும் சிட்டா ஆகியவை இந்து சமய அறநிலையத்துறையின் hrce.tn.gov.in என்ற அதிரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
இதன்மூலம் கோயில் நிலங்களின் உரிமை ஆவணங்களை, பொதுமக்கள் பார்வையிடலாம் அல்லது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.







