கொரோனா நோய்த் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு அந்நோய்த் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண தொகையைத் தாமதமின்றி பெற்றுத்தர துறைத் தலைவர்களுக்குத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு அனைத்து துறை செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “கொரோனா நோய்த் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு அந்நோய்த் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழக்க நேரிடும் அரசு முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதி உதவியை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தற்போது வழங்கிவருகிறது.
இத்துறையின் கீழ் ஏற்கனவே நிலுவையில் உள்ள முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு மட்டும் முதலமைச்சர் பொது நிவாரண நிதி உதவியை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையே பரிசீலித்து ஆணைகள் வழங்கும்.
இனிவரும் நாட்களில் உயிரிழக்கும் முன்களப் பணியாளர்களின் விவரங்களைச் சம்பந்தப்பட்ட துறை தலைவர்களே பரிசிலினை செய்து அதனை நிதித்துறைக்கு அனுப்பி ஒப்புதலைப் பெற்று கொரோனா நிவாரண நிதி உதவி வழங்குவதற்கான ஆணைகளை வெளியிடலாம்.
முன்களப் பணியாளர்களுக்கான முதலமைச்சர் பொது நிவாரண நிதி வழங்குவதில் உள்ள காலதாமதத்தினை தவிர்க்கவேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா நிவாரண நிதி உதவி வழங்கப்பட்ட விபரங்கள் மற்றும் அரசாணையின் நகல்களை சம்பந்தப்பட்ட துறையினர் உடனுக்குடன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர்க்குத் தெரிவிக்கவேண்டும்” என கூறப்பட்டுள்ளது.







