கடந்த செப்.27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், வழக்கு தொடர்பாக தவெக தலைவர் விஜய், தவெக பொதுச் செயலர் என்.ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச்செயலர் சி.டி.ஆர். நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலர் மதியழகன் ஆகியோர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர்.
இதனிடையே, கரூர் உயிரிழப்பு தொடர்பான விசாரணைக்கு தவெக தலைவர் விஜய் இன்று ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், இன்று தவெக தலைவர் விஜய் ஆஜராக இயலவில்லை என்றும், 10 நாள்களுக்குப் பிறகு வேறொரு தேதியில் டெல்லிக்கு பதிலாக சென்னையில் ஆஜராக புதிதாக அழைப்பாணை அனுப்பினால் ஆஜராகி வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க விரும்புவதாகவும் விஜய் சார்பில் சிபிஐக்கு கடந்த திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதனை பரிசீலித்து, விஜய் இன்று ஆஜராகாமல் இருக்க சிபிஐ விலக்கு அளித்தது. இதனிடையே வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அவர் மார்ச் 17-ல் ஆஜராகிறார்.
இது தொடர்பாக செந்தில் பாஜாஜி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்கு பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.







