கிராமப்புற மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு, அரசு பள்ளிக்கு அவர்களை சொந்த செலவில் ஆட்டோவில் அழைத்து வருகின்றனர் ஆசிரியர்கள். அந்த உன்னத ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
அரசுப் பள்ளி வறுமையின் அடையாளம் இல்லை, அது பெருமையின் அடையாளம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு அரசு நடுநிலைப் பள்ளி. 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வரும் இந்த பள்ளியில், ஒரு தலைமை ஆசிரியரும் ஐந்து இடைநிலை ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர்.
இப்பள்ளியில் கிராமப்புற பகுதிகளை சார்ந்த மாணவர்களே அதிகம் படிக்கும் நிலையில், அவர்கள் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் நடந்தே பள்ளிக்கு வரவேண்டிய அவலம் நிலவியது. பள்ளியின் புதிய தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற கந்தசாமி, மாணவர்கள் தினமும் பள்ளி வர ஒரு நல்ல தீர்வு காண வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து ஒரு சாதுர்யமான முடிவை எடுத்தார்.
மூரார்பாளையம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தர்மதுரை மூலம் ஒரு நாளைக்கு ஒரு ஆசிரியர் என தினமும் காலை மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வர வேண்டும், மாலையில் பள்ளி முடிந்தவுடன் அழைத்து சென்று வீடுகளில் விட வேண்டும் என்று அட்டவணை போட்டுக் கொண்டு, செயல்பட்டு வருகின்றனர்.
அண்மைச் செய்தி: ‘நடிகர் விக்னேஷ், முகமது தமீமை கைது செய்ய வேண்டும்’ – ராம் பிரபு ராஜேந்திரன்
ஆட்டோவுக்கு ஆகும் தொகையை பள்ளியின் ஆசிரியர்கள், மாதந்தோறும் தங்களதுசொந்த பணத்தில் இருந்து கொடுக்கின்றனர். கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஆட்டோ மூலம் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வரும் ஆசிரியர்களின் செயல், பெற்றோர் உட்பட பலரின் பாராட்டை பெற்றுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








