தொகுதி மறுவரையரை மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மீண்டும் கொண்டுவர திட்டமிட்டுள்ள நிலையில், இதுகுறித்து இந்தியா கூட்டணி கட்சிகயில் இடம்பெற்றுள்ள தமிழக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பா. சிதம்பரம், மாணிக்கம் தாகூர், வி. வைத்தியலிங்கம், நவாஸ் கனி, துரை வைகோ, செல்வராஜ் கார்த்திக் சிதம்பரம், சச்சிதானந்தம், சுதா, விஷ்ணுபிரசாத், விஜய் வசந்த் கோபிநாத், பிரவீன் சக்கரவர்த்தி ராபர்ட் புரூஸ், கிறிஸ்டோபர் மாணிக்கம், மற்றும் சு. வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெலியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது, “தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஒன்றிய பாஜக அரசு தயாராகிவிட்டது.
இதன் விளைவுகள், தமிழகம் மற்றும் தென் மாநிலங்களின் அதிகாரப் பங்கீட்டு உரிமையை கடுமையாகப் பாதிப்பதாகவும், நாடு முழுவதும் சிறுபான்மைவாக்காளர்கள் தாக்கம் ஏற்படுத்தும் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறுக்குவதாகவும் அமைய உள்ளதை அறிய முடிகிறது.
இதை எதிர்கொள்வது சம்பந்தமாகவும், தமிழகத்தின் நலன் மற்றும் உரிமை சார்ந்த விஷயத்தில் துளியளவும் சமரசத்திற்கு இடமில்லை என்பதை உறுதிப்படுத்தவும், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் உள் அரங்கில் நடைபெற்றது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்று இருந்த திமுக சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதனால் திமுக இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் தொகுதி மறுவரையறை குறித்து திமுகவின் நிலைபாடு என்ன என்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திருச்சி சிவா “”மசோதாவில் என்ன உள்ளது என்பதை அறியாமலேயே அது குறித்து எவ்வாறு கருத்து தெரிவிப்பது?” என்று குறிப்பிட்டார்.




