முதுமலை புலிகள் காப்பகத்தில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக வன விலங்குகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய செயற்கை தண்ணீர் தொட்டிகளில் குடிநீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் 321 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. இந்த வனப்பகுதி யானை, புலி, மான், சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் மற்றும் அரிய வகை பறவை இனங்களின் வாழ்விடமாக உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு மற்றும் பகலில் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வனப்பகுதி முழுவதும் செடி, கொடிகள் கருகி தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகளின் தண்ணீர் தேவை முற்றிலும் குறைய துவங்கி, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக,
வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாயாற்றிலிருந்து வாகனம் மூலம் தண்ணீர் கொண்டு சென்று, வனப்பகுதியில் உள்ள செயற்கை தண்ணீர் தொட்டிகளில்
தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கடும் வறட்சியை சமாளிக்கவும், வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வனத்துறையினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.







