தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் 4-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுக எம்.பி. முகமது ஜான் மறைவு காரணமாக ஒரு மாநிலங்களவை இடம் காலியானது. அதிமுகவின் வைத்திலிங்கம் மற்றும் முனுசாமி ஆகியோர் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்காக தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் தமிழ்நாட்டில் மொத்தம் 3 மாநிலங்களவை இடங்கள் காலியானது. ஆனால், சமீபத்தில் ஒரே ஒரு இடத்திற்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி, அதிமுக எம்பி முகமது ஜான் மறைவு காரணமாக காலியான இடத்திற்கு நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளரான எம்.எல்.அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், இதனையடுத்து, காலியாக உள்ள 2 இடங்களுக்கும் எப்போது தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 4-ம் தேதி தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது.








