விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு தடைவிதிக்கவில்லை என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய சட்டமன்ற பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன், விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பல இடங்களில் விநாயகர் சிலைகளை போலீசார் அகற்றும் காட்சிகளை பார்ப்பது வருத்தமளிப்பதாகவும் சில கட்டுப்பாடுகளுடன் கொண்டாட அனுமதி வழங்கவேண்டும் என நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக விளக்கமளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விநாயகர் சதுர்த்தி கொண்டாட கூடாது என அரசு சொல்லவில்லை எனவும், ஒன்றிய அரசு வழிகாட்டுதலின்படி தான் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடி கொண்டாட மட்டுமே தடை விதிக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். வீடுகளில் உரிய வழிமுறைகளை பின்பற்றி சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் கொண்டாடலாம் என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.