தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா நோய் தொற்றாலர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
தமிழகத்தில் ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சென்னை மட்டுமின்றி பல்வேறு நகரங்களிலும் ரெம்டெசிவர் மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். முதலமைச்சராக பதவியேற்பதற்கு முன்பிருந்தே கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மு.க.ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது 108 ஆம்புலன்ஸ், தடுப்பூசி சேமிப்பு கிடங்கு ஆகியவற்றில் ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா நோயாளிகளை பாதுகாப்பாக இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். 18 வயது நிரம்பியோருக்கு தேவையான தடுப்பூசிகளை வாங்க பணம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.







