மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை இன்று முதல் தொடங்கியது
இந்தியா முழுவதும் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த கொடூரத் தொற்றுக் காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவாக, தொடர்ந்து மூன்று நாள்களாக நான்கு லட்சத்தை கடந்து இந்த தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 187 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெவிசிர் மருந்து சென்னையில் மட்டுமே விற்கப்பட்டு வந்தது. மதுரை, கோவை, நெல்லை, சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் ரெம்டெடிசிவிர் மருத்துகளை விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவித்திருந்தார்.
இதற்கிடையே, ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் மதுரையில் இன்று முதல் விற்பனை தொடங்கியது. மதுரை அரசு மருத்துவ கல்லூரி நுழைவாயில் பகுதியில் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு வயால் (பாட்டில்) 1568 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மருத்துவர் பரிந்துரை கடிதம், நோயாளிகள் மற்றும் மருந்து வாங்க வருபவர்களின் ஆதார் அட்டை நகல், சிடி ஸ்கேன், RTPCR பரிசோதனை சான்றிதழ் உள்ளிட்டவற்றை கட்டாயம் கொண்டு வந்தால் மட்டுமே மருந்து வழங்கப்படும் என வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.







