ஒரு கர்ப்பிணி மருத்துவரின் கொரோனா மரணம்: யார் இந்த மருத்துவர் சண்முகப்பிரியா!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் சேவை ஒன்றையே பிரதானமாகக் கொண்டு பணியாற்றி வந்த எட்டு மாத கர்ப்பிணியான மருத்துவர் சண்முகப்பிரியா கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். எந்த நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற…

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் சேவை ஒன்றையே பிரதானமாகக் கொண்டு பணியாற்றி வந்த எட்டு மாத கர்ப்பிணியான மருத்துவர் சண்முகப்பிரியா கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

எந்த நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என அவர் தன் மகப்பேறு காலத்தையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிவந்தாரோ அதே கொரோனா வைரசால் சண்முகப்பிரியாவும் அவர் வயிற்றில் வளர்ந்த எட்டு மாத சிசுவும் உயிரிழந்துள்ளனர்.

மக்கள் மருத்துவர் சண்முகப்பிரியா

ஒரு உடம்பில் இரு உயிர்களின் இழப்பு மருத்துவர் சண்முகப்பிரியாவின் குடும்பத்தினரையும் தாண்டி தமிழக மக்களை கவலைகொள்ளச் செய்துள்ளது. அதேநேரம் கொரோனா நோய் தொற்று காலத்தில் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேவையும் அதிகரித்துள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் 31 வயதான மருத்துவர் சண்முகப்பிரியா. சிறு வயது முதலே டாக்டராக வேண்டும் என்பதுதான் இவரது பெருங்கனவு. அதன்படி 2016-ம் ஆண்டு மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் முடித்தார் அவர். அதன்பிறகு சொந்த ஊரான சின்னமனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே சண்முகபிரியாவுக்கு வேலையும் கிடைத்தது.

மருத்துவத்தை தொழிலாக இல்லாமல் சேவையாக மட்டுமே பார்த்த சண்முகப்பிரியா அங்கு இரவு பகல் பாராமல் மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வந்தார்.
பணியிடத்தில் மட்டுமல்ல எந்த நேரத்திலும் மருத்துவ உதவிக்காக அவரது வீட்டு கதவை பொதுமக்கள் தட்டலாம். இதன்காரணமாக தன்னுடைய வீட்டில் ‘என் வீட்டு வாசல் கதவு நோயாளிகளுக்காக 24 மணி நேரமும் திறந்தே இருக்கும்’ என்று போர்டு மாட்டி வைத்திருந்தார்.

இதுவே அவரது சேவை மனப்பான்மைக்கு சிறந்த சான்று. இதன் காரணமாக, சண்முகப்பிரியாவின் பெயருக்கு பின்னால் மக்கள் மருத்துவர் என்ற பெயரும் சேர்ந்து கொண்டது.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கருவுற்றார்

இந்நிலையில்தான் சண்முகப்பிரியாவுக்கு கடந்த ஓராண்டு முன்பு மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் தேனி மாவட்டத்திலிருந்து, மதுரை அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனிக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். அங்கும் அவரது மக்கள் சேவை தொடர்ந்தது.

சண்முகப்பிரியாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில் சமீபத்தில்தான் கருத்தரித்துள்ளார். குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது. வாரிசை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக குடும்பத்தினர், வீட்டிலிருந்து ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு சண்முகப் பிரியாவுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால், இந்த கொரோனா காலகட்டத்தில், மக்கள் சேவையே முக்கியம் என்பதால் 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் அவர் தினமும் அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மக்களக்கு மருத்துவ உதவிகளை வழங்கி வந்தார்.

இந்நிலையில்தான் சண்முகப்பிரியா அங்கு உள்ள மருத்துவமனையில் கர்ப்பகால தடுப்பூசி போடுவதற்காக சென்று உள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சண்முகப்பிரியாவை உறவினர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்த போதிலும் டாக்டர்களின் சிகிச்சை பலனின்றி சண்முகப்பிரியா கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார்.

பாதுகாப்பாக இருப்பதே அவருக்கான அஞ்சலி

மருத்துவர் சண்முக பிரியாவின் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். மருத்துவர் சண்முகப்பிரயா பணியாற்றிவந்த மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதார மையத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

சேவை நோக்கத்தை ஒன்றையே பிரதானமாகக் கொண்டு, தமது உயிரைத் துச்சமாக மதித்து பணியாற்றிய மருத்துவர் சண்முகப்பிரியா இப்போது நம்மிடையே இல்லை. மக்கள் சேவைக்காக அவர் தமது இன்னுயிரைத் தியாகம் செய்திருக்கிறார்.

அரசின் கொரோனா தடுப்பு வழிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடித்து கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு அளிப்பதே பொதுமக்களாகிய நாம் மருத்துவர் சண்முகப் பிரியாவுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.