சினிமா பாணியில் சித்தப்பாவையே கடத்தி பணம் கேட்டு மிரட்டியவர் கைது!

சினிமா பட பாணியில் சொந்த சித்தப்பாவையே காரில் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய நபர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்தவர் ரியாசுதீன். கடந்த மே 1…

சினிமா பட பாணியில் சொந்த சித்தப்பாவையே காரில் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய நபர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்தவர் ரியாசுதீன். கடந்த மே 1 ஆம் தேதி இவரை செல்போனில் தொடர்பு கொண்ட ரிஸ்வானா என்பவர், ரியாசுதீனுக்கு சொந்தமான நிலத்தை பார்வையிட விரும்புவதாகக் கூறியுள்ளார். மேலும், ரியாசுதீனை தனது சொகுசு காரில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார்.

சிறிது தூரம் சென்றதும் காரில் ஏறிய சில மர்மநபர்கள் ரியாசுதீனைத் தாக்கி, அவரிடமிருந்த பணத்தை பறித்துக் கொண்டனர். மேலும் ரியாசுதீனின் செல்போனிலிருந்து 2 லட்ச ரூபாயையும் தங்கள் வங்கிக் கணக்குக்கு அனுப்பி உள்ளனர். பின் அவர்கள் காருடன் தப்பியோடிய நிலையில், அவர்கள் செல்போனில் கூறியபடி சில நாட்கள் கழித்து சாலையோரம் இருந்த இரு சக்கர வாகனத்தின் டேங்க் கவரில் மேலும் 2 லட்ச ரூபாய் பணத்தை வைத்துள்ளார் ரியாசுதீன்.

அந்த வண்டி தனது அண்னன் மகன் நஸ்ருதீனுடையது என்பதை அறிந்த ரியாசுதீன் போலீசில் புகாரளித்தார். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொண்ட போலீசார், அண்ணன் மகன் நஸ்ருதீன் உட்பட அவரது கூட்டாளிகள் 7 பேரை கைது செய்தனர். நஸ்ருதீனுக்கும் ரியாசுதீனுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.