தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கடந்த சில நாட்களுக்கு முன்பு தரமணி கல்லூரியின் காவலாளியாகப் பணியாற்றி வந்த வடமாநில இளைஞரின் மனைவியைச் சிலர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து வீசிய கொடூரத்தின் ரணம் ஆறும் முன், இன்று சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியின் உணவகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்த இளம்பெண் ஒருவரை, கல்லூரி வளாகத்திற்குள் வைத்தே கேண்டீன் மாஸ்டர் உள்ளிட்ட சிலர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன.
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் அறிவாலயத்தின் அவல ஆட்சியில், பாலியல் வன்கொடுமைகள் குறித்த செய்திகளுடன் தான் நமது தினசரி பொழுதே விடிகிறது. இதுதான் திமுகவின் விடியல் ஆட்சியா? அறநெறி போதிக்க வேண்டிய கல்விக்கூடங்களைக் காமுகர்களின் கூடாரமாக மாற்றியது தான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா?
“பெண்களுக்கெதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன்” என விளம்பர வசனம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில், இதுவரை இல்லாதளவிற்குத் தமிழகத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன. இப்படியொரு பெண்கள் விரோத ஆட்சிக்குத் தமிழக மக்கள் சமாதி கட்டப்போகும் காலம் நெருங்கிவிட்டது”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







