இந்திய மாநிலங்களுக்கு இடையே முதலீடுகளை ஈர்ப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான வசதிகள், விரைவான அனுமதிகள், முதலீட்டாளர்களுடனான நேரடித் தொடர்பு மற்றும் திட்டங்களைச் செயல்படுத்தும் வேகம் ஆகியவை மாநிலங்களின் தொழில் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் முதலீடு தொடர்பான ரகசியத் தகவல்கள் ஆந்திராவுக்குக் கசிந்ததாக எழுந்துள்ள சர்ச்சைக்கு மத்தியில், ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இதற்குப் பதிலளிக்கும் வகையில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் பதில் – நாரா லோகேஷ் கிண்டல்!
ஆந்திரப் பிரதேச மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ், தமிழ்நாட்டில் முதலீடு தொடர்பான தகவல்கள் கசிந்ததாக எழுந்துள்ள சர்ச்சையைச் சுட்டிக்காட்டி நவம்பர் 20 – வெள்ளிக்கிழமை கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “முதலீட்டாளர்களுக்கு அதே நாளில் பதிலளிப்பதுதான் ஆந்திராவின் ரகசிய முதலீட்டு உத்தி என்றும், மற்ற மாநிலங்களும் இதைப் பின்பற்றலாம் என்றும் அவர் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பான Guidance Tamil Nadu-வில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள், வரவிருக்கும் முதலீடுகள் தொடர்பான ரகசியத் தகவல்களை அண்டை மாநிலமான ஆந்திராவுடன் பகிர்ந்து கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாரா லோகேஷின் இந்தப் பதிவு வெளியாகியுள்ளது. மேலும், முதலீட்டாளர்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்வது, விரைவாக முடிவுகளை எடுப்பது ஆகியவை ஆந்திரப் பிரதேசத்தின் முதலீட்டு ஈர்ப்பு உத்தியின் முக்கிய அம்சங்களாக இருப்பதாக நாரா லோகேஷ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
வேகமான பதில் நல்லது; விரைவான செயல்பாடுதான் சிறந்தது – கீர்த்தனா பதிலடி!
நாரா லோகேஷின் பதிவைத் தொடர்ந்து, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “ விரைவான பதில்கள் நல்லதுதான்; ஆனால் அதைவிட விரைவான செயல்பாடுகள் சிறந்தது. மேலும், தமிழ்நாட்டில் 2-வது பதிப்பாக நடைபெற உள்ள VETTRI Investment & Conversion Conclave 2026 நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முதலீட்டு உறுதிமொழிகள், அவற்றைச் செயல்படுத்துவதற்கான இலக்குகள், களத்தில் தொடங்கப்படும் திட்டங்கள் மற்றும் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் ஆகியவற்றில் தமிழ்நாடு கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையில், முதலீட்டு உறுதிமொழிகளை நடைமுறைச் சாத்தியமான திட்டங்களாக மாற்றி, களத்தில் முடிவுகளை வழங்குவதில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், வரும் நவம்பர் 25-ம் தேதி நடைபெற உள்ள இந்த மாநாட்டிற்கு இன்னும் 4 நாட்களே உள்ளது.” என அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.




