இந்தியாவின் குறைந்த வட்டி விகிதம் மற்றும் வலுவான பொருளாதார வளர்ச்சியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார். அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்வாக வைத்திருப்பதால் அந்நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆசிய நாடுகளுக்கான நான்கு நாள் பயணத்தை முடித்துவிட்டு அமெரிக்கா திரும்பிய டிரம்ப், நேற்று இரவு வாஷிங்டனில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைச் சுட்டிக்காட்டி அமெரிக்க மத்திய வங்கியின் கொள்கைகளை விமர்சித்தார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சுமார் 7 சதவீதமாக இருப்பதாகக் குறிப்பிட்ட டிரம்ப், அமெரிக்காவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி சுமார் 4 சதவீதமாக உள்ளது என்றார். அமெரிக்க மத்திய வங்கி கடன் பெறுவதற்கான வட்டி விகிதங்களைக் குறைத்தால், அமெரிக்கப் பொருளாதாரம் 14 முதல் 20 சதவீதம் வரை வளர்ச்சியடைய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், உலகின் மற்ற நாடுகளைவிட அமெரிக்கா குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெற முடியும் என்ற நிலை இருக்க வேண்டும் என்றும் கூறினார். வலுவான பொருளாதாரக் குறியீடுகள் இருந்தபோதிலும், அமெரிக்க மத்திய வங்கி அரசியல் அணுகுமுறையுடன் செயல்பட்டு, கடன் பெறுவதற்கான செலவுகளை அதிகமாக வைத்திருப்பதாக டிரம்ப் குற்றம்சாட்டினார்.
வட்டி விகிதத்தைக் குறைத்தால் 650 பில்லியன் டாலர் சேமிக்கலாம்!
அமெரிக்காவில் வட்டி விகிதத்தை ஒரு சதவீதப் புள்ளி குறைத்தால், அரசின் கடன் செலுத்தும் தொகையில் 650 பில்லியன் டாலர் வரை சேமிக்க முடியும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
உற்பத்தித் துறையில் முதலீடுகள் அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். அமெரிக்காவில் தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் தொடர்ந்து 10 மாதங்களாக விரிவடைந்துள்ளதாகவும், இந்த ஆண்டில் புதிய உபகரணங்களுக்கான முதலீடு 21 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
தனது வரி விதிப்புக் கொள்கைகளே அமெரிக்காவில் உற்பத்தித் துறையில் முதலீடு செய்ய நிறுவனங்களை ஊக்குவித்துள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார். குறிப்பாக, ஆடி மற்றும் டொயோட்டா போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவில் உற்பத்தியில் முதலீடு செய்வதற்கு இந்தக் கொள்கைகள் உதவியதாகக் குறிப்பிட்டார்.
மேலும், கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோல் விலைகள் குறைந்து வருவது அமெரிக்கப் பொருளாதார முன்னேற்றத்தைக் காட்டுவதாகவும் அவர் கூறினார். எதிர்காலத்தில் பெட்ரோல் விலைகள் குறைவது, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்படக்கூடிய ஒப்பந்தத்தைப் பொறுத்தும் அமையலாம் என்றும் தெரிவித்தார்.
அமெரிக்க மத்திய வங்கியின் பணி என்ன?
அமெரிக்க மத்திய வங்கி, பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பொருளாதார நிலவரங்களின் அடிப்படையில் வட்டி விகிதங்களை நிர்ணயிக்கிறது. விலைவாசி நிலைத்தன்மையைப் பராமரிப்பதுடன், அதிகபட்ச வேலைவாய்ப்பை ஆதரிப்பதும் அதன் முக்கிய நோக்கங்களாகும்.




