தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 12-ஆம் தேதி (12.02.2024) கூடுவதாகவும், பிப்ரவரி 19-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் சபாநாயகர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு சென்னை, தலைமைச் செயலகத்தில்செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது சபாநாயகர் மு.அப்பாவு பேசியதாவது:
2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. தொடர்ந்து ஆளுநர் உரை மீதான விவாதம் இரண்டு நாட்கள் நடைபெறும்.
மேலும், பிப்ரவரி 19ஆம் தேதி காலை 10.00 மணிக்கு நடைபெறும் பேரவைக் கூட்டத்தில், 2024-2025ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, பேரவைக்கு அளிக்கப்படும். அதேபோல, 20ஆம் தேதியான செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும் பேரவைக் கூட்டத்தில், 2024-2025ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் குறித்த அறிக்கை வழங்கப்படும்.
இதுமட்டுமல்லாது, 21-ஆம் தேதியான புதன்கிழமை அன்று நடைபெறும் பேரவைக் கூட்டத்தில், 2023-2024ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி) குறித்த அறிக்கையும் பேரவைக்கு அளிக்கப்படும்
தொடர்ந்து பேசிய அவர், சட்டபேரவை சட்டபேரவை தலைவரை நீதிமன்றம் கட்டுப்படுத்தாது. சட்டப்பேரவைக்குள் ஒரு உறுப்பினரை எங்கு அமர வைக்க வேண்டும் என்பது சட்டபேரவை தலைவர் தான் முடிவெடுப்பார். சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையாக காட்ட முடியாது என்று அப்போதே தெரிவித்து உள்ளார்கள்.
ஆனால் நேரலையாக சட்டமன்ற நிகழ்வுகள் காட்டபடும் என்பது தான் இந்த அரசின் நோக்கம், கேள்வி நேரம் முழுவதும் காட்டப்படுகிறது. மீதமுள்ள மானியக் கோரிக்கை நிகழ்ச்சிகளையும் காட்ட முயற்சி செய்து வருகிறோம், இதற்கு முன் உள்ள அரசு சொன்னது போல் காட்டவே முடியாது என்று சொல்லவில்லை. 1971 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற சட்டமன்ற கூட்ட நிகழ்வுகளை இணையத்தில் கொண்டு வர இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் மு. அப்பாவு தெரிவித்துள்ளார்.







