தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஏப்ரல் 21ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, கூட்டத் தொடரின் 2-ம் பகுதி இன்று காலை தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு திருக்குறள் வாசித்து, காலை அவையை துவங்கி வைத்ததோடு, 2023-24 -ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்படி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை கேட்க்கொண்டார். அதன்பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த உரையில் பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் மேம்பாட்டுதுறை, சுற்றுச்சூழல் மேம்பாடு என பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின.
பின்னர் கூட்டம் முடிந்ததும் அலுவல் ஆய்வு குழு கூட்டம், சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில், அவை முன்னவர் துரைமுருகன், அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி மற்றும் அதிமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, கூட்டத்தொடரை ஏப்ரல் 21ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:
மார்ச் 29ஆம் தேதி முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும். பல்வேறு துறை சார்ந்த மானிய கோரிக்கை மீதான விவாதம் 23, 24, 27, 28-ம் தேதிகளில் நடைபெறும். காலை, மாலை என இரு வேளைகளிலும் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும். காலை 10 – 2 மணி வரை, மாலை 4 – 8 மணி வரை என இரு நேரங்களில் அவை நடைபெறும். காலை நேரத்தில் கேள்வி நேரம் நடைபெறும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா