‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடிய ஜெர்மன் தூதரக அதிகாரிகளை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்த ஆர்ஆர்ஆர் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ’நாட்டு நாட்டு’ பாடல் பல்வேறு விருதுகளை குவித்தது.
குறிப்பாக ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை சமீபத்தில் விருதை வென்றது. இதைத்தொடர்ந்து கடந்த 13ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதையும் வென்றது.
இந்நிலையில் ‘நாட்டு நாட்டு’ பாடலை மொழியை கடந்து உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். ஆஸ்கர் மேடையில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடியது வைரலானது. சமீபத்தில் இந்த பாடலை வீணையில் வாசித்து வீணை கலைஞர் ஸ்ரீவானி அசத்தியிருந்தார். இதேபோல் பல்வேறு பிரபலங்களுக்கு இந்த பாடலுக்கு நடனமாடி அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.
அண்மைச் செய்தி: மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி- அண்ணாமலை
அந்த வகையில், டெல்லியில் மிகவும் பரபரப்பான பகுதியான சாந்தினி சவுக் என்கிற பகுதியில் ஜெர்மன் தூதகர அதிகாரிகளும் ஊழியர்களும் இணைந்து நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமானி உள்ளனர். இந்த அசத்தலான நடன வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஜெர்மனி தூதரக அதிகாரிகள் ஆடிய வீடியோவை டிவிட்டர் பக்கத்தில் ஜெர்மனி நாட்டுக்கான இந்திய தூதர் பிலிப் அக்கர்மேன் பகிர்ந்திருந்தார். இதை ரீட்விட் செய்துள்ள பிரதமர் மோடி, ”இந்தியாவின் வண்ணங்கள். ஜெர்மனி நாட்டினர் சிறப்பாக நடனம் ஆடியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.







