சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை 125 நாட்களாக மத்திய அரசு உயர்த்தியதை பாராட்ட திமுகவிற்கு மனமில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் இதைத்தான் அவர்கள் குறிப்பிட்டார்கள். அதிமுக ஆட்சியில் எண்ணற்ற பிரச்சனைகளை சமாளித்து மக்களுக்கு சிறப்பான ஆட்சியை கொடுத்தோம். திமுக ஆட்சியில் கடனை மட்டுமே வாங்கியுள்ளனர். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. திமுக அரசின் மிகப்பெரிய சாதனை கடன் வாங்கியது தான்.
ரயில் கட்டணம் உயர்வதாக அறிவித்துள்ளனர். இன்றைய கால சூழ்நிலை ஏற்றவாறு விலைவாசி உயர்வு எரிபொருள் உயர்வு சம்பள உயர்வு இதையெல்லாம் கணக்கிட்டு தான் அவ்வப்போது உயர்த்துவார்கள். மத்திய அரசு இதனை பரிசளிக்க வேண்டும். ரயில்வே கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவெக தூய கட்சி என விஜய் குறிப்பிட்டது தொடர்பாக கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அடுத்த கட்சியை பற்றி எங்களுக்கு தெரியாது. அவர்களுடைய கருத்தை சொல்கிறார்கள் அது தூய்மையா, இல்லையா என்பது மக்கள் முடிவு செய்வார்கள். இது தொடர்பாக கே.பி முனுசாமி பதில் அளித்துள்ளார்.
திமுக கடந்த முறை குழு அமைத்து நாடகத்தை அரங்கேற்றினார்கள். ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களை சந்தித்து தேர்தல் அறிக்கையை தயார் செய்தனர். 565 அறிவிப்புகளை வெளியிட்டத்தில், இதுவரை எத்தனை அறிவிப்புகளை நிறைவேற்றியுள்ளனர். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தினை 150 நாளாக உயர்த்துவதாக கூறினார்கள் செய்தார்களா?மாணவருக்கான கல்வி கடன் தள்ளுபடி செய்தார்களா? மக்களை ஏமாற்றி கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த பின் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்ட அரசு திமுக அரசு.
அதிமுகவை பொறுத்தவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். விரைவில் அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு குறித்து தலைமை அறிவிக்கும். ஒப்பந்த அடிப்படையில் பணி செய்யும் செவிலியர்கள் குறிப்பிட்ட காலம் சென்றால் அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இந்த அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் உள்ளது. ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகளை மறந்த அரசு திமுக என்று விமர்சனம் செய்துள்ளார்.







