பெண்கள் பாதுகாப்பு உணர்வுடன், அச்சமின்றி வாழ்வதற்கான மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில், அவ்வையார் விருது – நீலகிரி கமலம் சின்னசாமி, பெண் குழந்தை விருது – சேலம் ம. இளம்பிறை, சிறந்த மாவட்ட ஆட்சியர்களுக்கான விருது – திருவள்ளூர், நாகப்பட்டினம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, கீதா ஜீவன், சேகர்பாபு, கயல்விழி, மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள், விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசுகளை வழங்கப்பட்டன.
இதையும் படிக்கவும்: தென்னிந்திய மக்களின் கலை, கலாச்சாரத்தை அறிய சைக்கிள் பயணம் செய்யும் வெளிநாட்டினர்!
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரன்புக்குரிய சிங்கப்பெண்களே, உங்களுக்கு மகளிர் தின வாழ்த்துகள் என்றார். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக, அதிகாரிகளாக பெண்கள் எந்த அளவிற்கு வந்துள்ளனர் என்பதை பார்த்து ரசிப்பதற்கு தந்தை பெரியார் இல்லையே என்ற கவலை தான் உள்ளது என்று குறிப்பிட்டார்.
நாட்டின் வளர்ச்சி மகளிர் கையில் தான் உள்ளது. மகளிரை வாழ்த்துவதன் மூலம் நாட்டை வாழ்த்துகிறோம். சமூகத்தை பெண் வழிநடத்துவதையே நாடும் விரும்புகிறது. ஈவெ ராமசாமி நாயக்கர் என்று அழைக்கப்பட்டவருக்கு பெரியார் என்ற பட்டத்தை தந்தது பெண்கள் தான். திராவிட இயக்கம் என்பது பெண்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றியது.
கட்டணமில்லா நகரப் பேருந்தால் எத்தனை கோடி இழப்பு என்பதை விட, எத்தனை லட்சம் மகளிர் பயனடைகிறார்கள் என்பது தான் முக்கியம். அதிகாரம் பொருந்தியவர்களாக பெண்களை உயர்த்துவதற்காக திட்டங்களை தீட்டி வருகிறோம்.
பெண்கள் பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது.
மனரீதியாக பெண்கள் அடிமை என்பது ஆண்களின் மனதில் உள்ளது. அதனை மாற்றியாக வேண்டும். பெண்கள் பாதுகாப்பு உணர்வுடன், அச்சமின்றி வாழ்வதற்கான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அண்மையில் அச்சுறுத்தல் ஏற்பட்ட போது அடைக்கலம் தேடி தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். சென்னை வந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அந்தளவிற்கு தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று கூறினார்.
விழாவில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், கட்டணமில்லா பேருந்தால் மகளிர் மாதம் ரூ.700-1000 வரை சேமிக்கிறார்கள் என்று கூறினார்.







