தமிழ்நாட்டிலே ஒரு பெண் எப்படி முதலமைச்சராக உருவாகலாம் என்பதை நிரூபித்து காட்டியவர் ஜெயலலிதா என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் அரசியல் காட்சிகள் சார்பிலும் மகளிர் தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில், மகளிர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வருகை தந்த எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு, மகளிர் அணி நிர்வாகிகள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். இதை தொடர்ந்து 5 சமாதான புறாக்களை பறக்க விட்டும், கேக் வெட்டியும் மகளிருக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் பெண்களும் முதலமைச்சராக உயரலாம் என்பதை நிரூபித்து காட்டியவர் ஜெயலலிதா. பெண்கள் உலகில் தெய்வங்களாக போற்றப்படும் நிலையில் திமுக ஆட்சியில் பெண்கள் நடமாட முடியாத சூழல் நிலவுகிறது. 31 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தொட்டில் குழந்தைகள் திட்டம், பெண்கள் பாதுகாப்பு திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் திமுக அரசு, அதிமுக பெண்களுக்காக கொண்டுவந்த அத்தனை திட்டங்களையும் நிறுத்திவிட்டது என எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
அதிமுக மகளிர் அணி சார்பில் நடத்தப்பட்ட இந்த சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தில், அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் , மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- பி.ஜேம்ஸ் லிசா









