“தமிழ்நாடு ‘Vice City’ ஆகிவிட்டது!” – ஸ்டாலின் கடும் விமர்சனம்!

TVK ஆட்சியில் போதைப் பொருள் கடத்தல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு அதிகரித்துள்ளதாகவும், தமிழ்நாடு ‘Vice City’ ஆகிவிட்டதாகவும் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னையில் 700 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை ஒன்றிய அரசின் வருவாய்ப் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்துள்ளது. கடந்த மாதம் நாகையில், 270 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளுடன் த.வெ.க. நிர்வாகியான ‘மெத்’ பூபாலனின் கடத்தல் சாம்ராஜ்யத்தைப் பிடித்த அதே DRI அமைப்புதான் இதனையும் பிடித்துள்ளது. நம் மாநிலத்தில் அவர்கள் மாதாமாதம் பிடிக்கிறார்கள்.

காவல்துறையால் ஏன் பிடிக்க முடியவில்லை?

இதில் நமக்கு எழும் கேள்வி என்னவென்றால், தமிழ்நாட்டுக்குள் நடக்கும் இவ்வளவு பெரிய அளவிலான போதைப் பொருள் நடமாட்டங்களை மாநில அரசின் காவல்துறையால் ஏன் பிடிக்க முடியவில்லை? பிடிக்க முடியவில்லையா அல்லது கண்டும் காணாமல் இருக்கிறார்களா? முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக இருந்த தமிழ்நாடு இப்போது மெத், ஹெராயின் கடத்தல்காரர்களின் favourite destination ஆகிவிட்டது. தொடரும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, தவெகவினரின் கட்டுக்கடங்காத பாலியல் அத்துமீறல்கள், மாபெரும் கொள்ளைச் சம்பவங்கள், குலைநடுங்க வைக்கும் லாக்கப் மரணங்கள் என TVK ஆட்சியில் தமிழ்நாடே Vice City ஆகிக் கொண்டிருக்கிறது.

65 சிறப்பு அதிரடிப் படை என்ன செய்கிறது?

இவற்றில் இருந்தெல்லாம் திசைதிருப்ப நேற்று புள்ளிவிவரங்களை ஒப்பித்த காவல்துறைத் தலைவர் இந்த ஹெராயின் பறிமுதல் குறித்து என்ன சொல்லப் போகிறார்? எல்லவாற்றுக்கும் ‘வழக்கு பதியப்பட்டுள்ளது’ என்பதை மட்டுமே பதிலாகத் தரும் அவர், மாநில அரசின் அமைப்புகளால் ஏன் போதைக் கடத்தல்காரர்களைப் பிடிக்க முடியவில்லை என்பதற்கு பதில் சொல்ல வேண்டும். போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க அமைக்கப்பட்ட 65 சிறப்பு அதிரடிப் படை என்ன செய்துகொண்டிருக்கிறது?

முதலமைச்சர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி!

முதலமைச்சர் விஜய் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறையில் இத்தனை பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கிறது. இப்போதும் பேசவில்லை என்றால் எப்போதுதான் அவர் பேசுவார்? தவெக ஆட்சியில் அக்கட்சியின் ரீல்ஸ்மோகிகள் சட்டவிரோதமாக அணையைக் கூட திறக்கிறார்கள். ஆனால், முதலமைச்சர் விஜயின் வாயை யாராலும் திறக்க முடியவில்லையே!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.