வறுமையிலிருந்து மீண்ட 50 கோடி இந்தியர்கள்.. FICCI மாநாட்டில் மோடி பெருமிதம்!

டெல்லியில் நடைபெற்ற இந்திய தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பின் (FICCI) நூற்றாண்டு மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி , கடந்த 12 முதல் 13 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 50 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக உலக வங்கி அறிக்கையை மேற்கோள்காட்டியுள்ளார்.

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற FICCI அமைப்பின் நூற்றாண்டு மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த 100 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் பல்வேறு கட்டங்களைக் கடந்து வந்துள்ளதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, ‘லைசென்ஸ் கோட்டா ராஜ்’ (License Quota Raj), தேசியமயமாக்கல் முயற்சிகள் மற்றும் 21-ம் நூற்றாண்டில் இந்தியா ‘Fragile Five’ பொருளாதார நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றிருந்த காலகட்டம் ஆகியவற்றை நினைவுகூர்ந்தார். மேலும், கடந்த 12 ஆண்டுகளில் இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறையினரின் கடின உழைப்பால் இந்தியாவின் நிலைமை மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

100 ஆண்டுகளைக் கடந்த FICCI.. அடுத்த 20 ஆண்டுகளுக்கான இலக்கு!

1927-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கப்பட்ட FICCI அமைப்பு, தனது 100 ஆண்டுகாலப் பயணத்தைக் கொண்டாடும் வகையில் இந்த மாநாட்டை நடத்துகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் கடந்த ஒரு நூற்றாண்டாக இந்த அமைப்பு ஆற்றிய பங்களிப்புகளைப் பிரதமர் மோடி பாராட்டினார். மேலும், காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு தொடர்ந்து செயல்பட்டு வரும் FICCI அமைப்பின் பங்களிப்பு முக்கியமானது என்றும் குறிப்பிட்டார். கடந்த 100 ஆண்டுகளில் இந்தியத் தொழில்துறை பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள நிலையில், அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியத் தொழில்துறை எத்தகைய இலக்குகளை அடைய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டிய நேரம் இது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

விவசாய வளர்ச்சி 4 சதவீதத்தைத் தாண்டியது!

கடந்த வாரம் இந்தியா டுடே குழுமம் நடத்திய ‘கிசான் டாக் பாரத்’ விவசாய மாநாட்டிலும் பிரதமர் மோடி இதேபோன்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். அப்போது, உலக வங்கி ஆய்வை மேற்கோள் காட்டிய அவர், இந்தியாவில் தீவிர வறுமை விகிதம் 2011-ம் ஆண்டில் 27.1 சதவீதமாக இருந்த நிலையில், 2023-ம் ஆண்டில் 2.6 சதவீதமாகக் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், சுதந்திரத்திற்குப் பிறகு முதல்முறையாக கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் விவசாயத் துறை சராசரியாக 4 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த 12 முதல் 13 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 50 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாகவும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் இதன் மூலம் பயனடைந்துள்ளதாகவும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.