எல்லை தாண்டிய பயங்கரவாதம்.. அமித் ஷா தலைமையில் முக்கிய ஆலோசனை!

எல்லை தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது, பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய உத்திகளை உருவாக்குவது உள்ளிட்ட தேசியப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க, டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெறும் பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார்.

ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த மாநாட்டில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர், மத்திய விசாரணை அமைப்புகளின் அதிகாரிகள் மற்றும் சட்டம், தொழில்நுட்பம், தடயவியல் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர். தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுப்பது, அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை மேம்படுத்துவது மற்றும் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது ஆகியவை இந்த மாநாட்டின் முக்கிய நோக்கங்களாக உள்ளன.

எதிர்கால பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்!

இந்த மாநாட்டில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் முக்கிய விவாதப் பொருளாக இடம்பெறுகிறது. மேலும், வெளிநாடுகளில் இருந்து வழக்குகளுக்குத் தேவையான ஆதாரங்களைச் சேகரிப்பது, பயங்கரவாத விசாரணைகளில் டிஜிட்டல் தடயவியல் மற்றும் தரவு பகுப்பாய்வைப் பயன்படுத்துவது, வழக்குகளைத் திறம்பட நடத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.

அதேபோல், இளைஞர்கள் தீவிரவாதப் பாதைக்கு செல்வதைத் தடுப்பது, தேசியப் பாதுகாப்புக்கு புதிதாக உருவாகும் கலப்புத் தன்மை கொண்ட அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதைத் தடுப்பது போன்ற விவகாரங்களும் விவாதிக்கப்படுகின்றன. மேலும், எதிர்காலத்தில் உருவாகக்கூடிய பயங்கரவாத அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கணித்து எதிர்கொள்வதற்கான புதிய உத்திகளை உருவாக்குவது மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்திறனை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

மாநாட்டை ஏற்பாடு செய்த தேசிய புலனாய்வு முகமை!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, தேசிய புலனாய்வு முகமை (NIA) இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, மாநில காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட சட்டத் துறை சார்ந்த நிபுணர்களுக்கும் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

புதிய குற்றவியல் சட்டங்களைப் பயங்கரவாத வழக்குகளின் விசாரணையில் பயன்படுத்துவது, வழக்கு விசாரணையின்போது டிஜிட்டல் ஆதாரங்களைச் சமர்ப்பிப்பது, நீதிமன்ற விசாரணைகளைத் திட்டமிட்டு நடத்துவது உள்ளிட்டவை குறித்து பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும், பயங்கரவாத வழக்குகளுக்கான சிறப்பு விசாரணை நடைமுறைகள், சாட்சிகளுக்குப் பாதுகாப்பு அளித்தல், வழக்குகளின்போது எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதற்காக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.

பாதுகாப்பு அமைப்புகளின் அனுபவங்கள் பகிர்வு!

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாதுகாப்பு அமைப்புகள் எதிர்கொண்ட அனுபவங்கள், சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட நடைமுறைகள் மற்றும் விசாரணைகளில் கிடைத்த படிப்பினைகள் ஆகியவை பகிர்ந்துகொள்ளப்பட உள்ளன. இதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மூத்த காவல்துறை அதிகாரிகள், மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சட்டம், தடயவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிபுணர்கள் எனப் பலரும் பங்கேற்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.