தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம் செயல்படவில்லை: நியூஸ் 7 தமிழுக்கு ஓய்வுபெற்ற நீதியரசர் குலசேகரன் பிரத்யேக பேட்டி!

கூடுதல் கால அவகாசம் வழங்காததால், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்காக அமைக்கப்பட்ட ஆணையம் செயல்படவில்லை என ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும்…

கூடுதல் கால அவகாசம் வழங்காததால், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்காக அமைக்கப்பட்ட ஆணையம் செயல்படவில்லை என ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக வன்னியர்களுக்கு 20 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக மற்றும் வன்னியர் சங்கம்சார்பில் பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்த நிலையில், சாதிவாரியான புள்ளிவிவரங்களை திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க ஏதுவாக ,சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.குலசேகன் தலைமையில், கடந்த 2020-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில், அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் 3 மாதங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியிருந்தது.

ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அமைக்கப்பட்ட ஆணையத்திற்கு கால அவகாசம் கூடுதலாக வழங்காத காரணத்தினால் ஆணையம் தொடர்ந்து செயல்படவில்லை என ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் குலசேகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு ஓய்வுபெற்ற நீதியரசர் குலசேகரன் அளித்துள்ள பேட்டியில், சமூகநீதியை நிறைவேற்ற சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தி தரவுகளை தர வேண்டும் என்று கூறுவதை முழுமையாக வரவேற்கிறேன். மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் நன்றாக இருக்கும். எனது தலைமையில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை உறுப்பினர்களாக கொண்டு கடந்த 2020 ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்கப்பட்டது.

ஆணையம் அமைக்கப்பட்ட இரண்டே மாதத்திற்குள் தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதால் அந்த ஆணையத்தின் பணிகள் முழுமையடையவில்லை. எங்களின் பணிக்காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான முதற்கட்ட பணிகளை நிறைவு செய்து இடைக்கால அறிக்கையை அரசுக்கு அளித்தோம். ஆறு மாத காலத்திற்கு பிறகு ஆணையத்திற்கான கால அவகாசம் புதுப்பிக்கப்படவில்லை என்பதால் ஆணையம் தொடர்ந்து செயல்பட முடியவில்லை என நீதியரசர் குலசேகரன் தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.