இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 27 மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு வெளியுறவுத் துறை அமைச்சருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு அவர் எழுதிய…

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 27 மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு வெளியுறவுத் துறை அமைச்சருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில், இருவேறு சம்பவங்களில் 27 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களது மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

கடந்த 14-ம் தேதியன்று IND-TN-MM-237, IND-TN-10-MM-970, IND-TN-10-MM-56 மற்றும் IND-TN-10-MM-708 ஆகிய பதிவு எண்கள் கொண்ட 4 மீன்பிடிப் படகுகளில் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களும், மற்றொரு சம்பவத்தில் IND-TN-11-MM-726 பதிவெண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்களும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அவர்களது மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

தொடர்ச்சியாக இதுபோன்று மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் மீனவ மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ள மீனவர்கள் கைது செய்யப்படுவதால், மீனவ மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதுபோன்ற சம்பவங்களால் மீனவ சமுதாயக் குடும்பத்தினருக்குப் பொருளாதார இழப்புகள் ஏற்படுவதோடு, இத்தொழிலை நம்பியுள்ள எண்ணற்ற குடும்பத்தினரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. 

எனவே, உடனடியாக தூதரக அளவிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.