நாக்பூரில் தமிழக விவசாயிகள் கைது – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ள நம் விவசாயிகளை உடனே விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக ரயிலில் சென்ற தமிழ்நாட்டு விவசாயிகளை நாக்பூரில் கைது செய்துள்ள மகாராஷ்டிரா மாநில காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மேகதாது விஷயத்தில் தொடக்கம் முதலே கர்நாடகாவுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்படும் நீர்வளத்துறையின் போக்கை கண்டித்துதான் தமிழ்நாட்டு விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தனர்.

ஆனால், அவர்கள் ரயிலில் சென்று கொண்டிருக்கும் போதே நடுவழியில் இறங்க வைத்து, தமிழ்நாட்டுக்கே திரும்பிச் செல்லுங்கள் என கட்டாயப்படுத்தி உள்ளது மகாராஷ்டிர காவல்துறை.

நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ள நம் விவசாயிகளை உடனே விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நம் விவசாயிகளை கைது செய்த மகாராஷ்டிர அரசிடம் அதற்கான விளக்கத்தைக் கேட்பதுடன், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கான உறுதியைப் பெற வேண்டும்.

டெல்லி சென்று போராட அவர்களை ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும். ஜனநாயக வழியில் போராடும் உரிமையைப் பறிக்கக் கூடாது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.