“தவறு செய்தவர்கள் மட்டுமல்ல, உடந்தையாக இருந்தவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்!” – கனிமொழி

சமூகத்தில் மதிப்பிற்குரியவர்களாகக் கருதப்படுபவர்கள், குழந்தைகள் மீது கொடூரமான செயல்களில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.

சிறுமிகளை பாலியல் வன்​கொடுமைக்கு உள்​ளாக்​கியதற்காக போக்ஸோ வழக்​கில் கைது செய்யப்​பட்​டுள்ள ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணியை 3 நாள் காவலில் எடுத்து போலீ​ஸார் விசாரித்து வருகின்​றனர். 

இந்த நிலையில் இதுகுறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “சமூகத்தில் மதிப்பிற்குரியவர்களாகக் கருதப்படுபவர்கள், குழந்தைகள் மீது இவ்வளவு கொடூரமான செயல்களில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 1990களில் இருந்தே இக்குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து இத்தகைய கொடுஞ்செயல்களில் அவர்களால் ஈடுபட முடிந்திருப்பதும், அதற்கான சூழல் சமூகத்தில் உருவாகியிருப்பதும் மிகுந்த கவலையளிக்கிறது.

இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், சட்டப்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

இது தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு மட்டும் கிடைக்க வேண்டிய நீதியல்ல. இனி எந்தக் குழந்தையும் இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாகாத வகையில், பாதுகாப்பான சமூகச் சூழலை உறுதி செய்ய வேண்டும்.

தவறு செய்தவர்கள் மட்டுமல்ல, தவறுக்கு உடந்தையாக இருந்தவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.