பாஜக முன்னாள் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “தமிழக அரசு மருத்துவமனைகளில் குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் தங்கு தடையின்றி சுவாசிக்க உயிர் காக்கும் மருந்தான Surfactant என்ற மருந்தானது பற்றாக்குறை நிலவுவதாக வெளியாகி உள்ள செய்திகள் மிகுந்த கவலையளிக்கிறது. அரசு மருத்துவமனைகளில் பச்சிளங் குழந்தைகள் தீவிர கண்காணிப்புப் பிரிவு எவ்வளவு முக்கியமானது என்பதை அறிந்தும் Surfactant மருந்தினை போதிய அளவு கையிருப்பு வைக்காதது மருத்துவத் துறையின் அலட்சிய போக்கினையே காட்டுகிறது.
இந்த மருந்தானது குறை பிரசவக் குழந்தைகள் சிரமமின்றி சுவாசிக்க வழங்கப்படுவது எனவும் தடைபட்டால் குழந்தைகள் சுவாசிக்கும் திறன் குறைந்து ஆபத்தை ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கும் வேளையில், தவெக அரசின் மருத்துவத் துறையில் உயிர்காக்கும் மருந்துகள் கையிருப்பில் வைத்திருக்காமல் தனியாரிடம் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது மருத்துவத்துறையின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது.
தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை முதலில் குழந்தைகள் உயிர்காக்கும் மருந்துகளைப் பெறுவதில் அக்கறை செலுத்துங்கள் மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருனரஜ் அவர்களே. குழந்தைகளின் உயிரோடு விளையாடாமல் உடனடியாக மருந்துகளை கொள்முதல் செய்து போதுமான அளவு கையிருப்பு வைத்திருக்க மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறையை வலியுறுத்துகிறேன்.




