மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் தீர்மானம்!

மேகதாதுவில் அணை கட்டுகிற முயற்சிகளை தமிழ்நாடு காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து போராடும் என்று காங்கிரஸ் கட்சி செயற்குழுக்கூட்டத்திக் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், எம்.பி தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான மாண்புமிகு ராஜேஷ்குமார் முன்னிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.


இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:


தீர்மானம் : 1
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் பரிந்துரையின் பேரில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கம் தாகூர், எம்.பி. -க்கு இக்கூட்டம் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.


தீர்மானம் : 2
தமிழக அரசியலில் ஏற்பட்ட அதிரடி மாற்றத்தின் காரணமாக கடந்த தேர்தலில் தமிழக மக்கள் ஏகோபித்த ஆதரவை த.வெ.க. தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையில் ஆட்சி அமைக்க தீர்ப்பு வழங்கியிருந்தாலும் அதை தடுப்பதற்கு ஆளுநர் மூலமாக பா.ஜ.க. தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. புறவாசல் வழியாக பா.ஜ.க. கட்டுப்பாட்டில் ஒரு ஆட்சி அமைவதை தடுக்கும் நோக்கத்துடன் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைய ஆதரவு தெரிவிக்க கடந்த மே 5 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரக்குழு கூடி முடிவெடுத்தது. அந்த முடிவை இக்கூட்டம் ஆமோதிக்கிறது. அதன்படி, தமிழகத்தில் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் அமைந்த ஆட்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் சுற்றுலாத்துறை அமைச்சராகவும், பெ. விஸ்வநாதன் உயர்கல்வித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றிருப்பதற்கு இக்கூட்டம் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.


தீர்மானம் : 3
12 ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக, 10 ஆண்டுகாலம் தமிழகத்தின் முதலமைச்சராக பொற்கால ஆட்சி நடத்திய பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளான ஜுலை 15 அன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட, வட்டார, நகர, சர்க்கிள், பேரூர், கிராம காங்கிரஸ் கமிட்டிகள் பெருந்தலைவரின் திருவுருவப் படத்தை அலங்கரித்து, காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஒருவார காலம் நிகழ்ச்சிகளை நடத்துவதோடு, “லஞ்சம் தவிர் – நெஞ்சம் நிமிர்” என்ற முழக்கத்துடன் மாவட்டம் முழுமையும் “ஊழல் ஒழிப்பு பிரச்சார இயக்கம்” நடத்தும்படி இச்செயற்குழு கூட்டம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளை கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 4
எஸ்.எஸ்.ஏ. முதல் திட்டத்தின்படி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் முற்றிலும் சீரமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் எஸ்.எஸ்.ஏ.- 2 திட்டத்தின்படி மாவட்ட தலைமைக்கு அடுத்த நிலையில் உள்ள வட்டார, நகர, சர்க்கிள், பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டிகளை முற்றிலும் சீரமைக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பார்வையாளர்களை அனுப்புவதென இச்செயற்குழு கூட்டம் முடிவு செய்கிறது. இதன்படி, மாவட்ட கமிட்டிகள் பார்வையாளர்களோடு இணைந்து அனைத்து மட்டத்திலும் கட்சியை சீரமைக்கிற முயற்சியின் மூலமாக காங்கிரஸ் கட்சி மேலும் வலிமைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையை இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.
காங்கிரஸ் அமைப்பு விதிகளின்படி தற்போது மாவட்ட, வட்டார, நகர, பேரூர், கிராம காங்கிரஸ் கமிட்டி என்று செயல்பட்டு வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின்படி, வட்டார காங்கிரஸ் கமிட்டிக்கும், கிராம காங்கிரஸ் கமிட்டிக்கும் இடையில் ஐந்து வாக்குச்சாவடி குழுக்களுக்கு ஒரு மண்டலக் காங்கிரஸ் கமிட்டி அமைப்பதென முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இம்முடிவினை செயல்படுத்துகின்ற வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மண்டலக் காங்கிரஸ் கமிட்டிகளை உடனடியாக அமைத்து அதற்கான விவரங்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பி வைக்கும்படி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.


தீர்மானம்: 5
அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் மோசடி செய்யப்பட்டது குறித்த காவல்துறை விசாரணையில், இதுவரை சுமார் ரூ.7 முதல் ரூ.7.5 கோடி வரை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட ஒரு கும்பலால் சட்டவிரோதமாகத் கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த மோசடி வெளிச்சத்திற்கு வருவதற்கு முன்பு, “ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை”யின் வங்கிக் கணக்குகளுக்கு நாளொன்றுக்கு சராசரியாக ரூ.16 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை நன்கொடைகள் வந்ததாக எஸ்.பி.ஐ. வங்கி ஊழியர்கள் சிறப்பு விசாரணைக் குழுவிடம் (SIT) தெரிவித்தனர். ஆனால், இந்த விவகாரம் வெளிவந்த பிறகு, அந்தத் தொகை நாளொன்றுக்கு ரூ.24 லட்சம் முதல் ரூ.26 லட்சமாக உயர்ந்தது. வங்கித் தரவுகளின் அடிப்படையில், கோயில் நன்கொடைகளிலிருந்து தினமும் ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை கையாடல் செய்யப்பட்டிருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
கடந்த காலங்களில் பா.ஜ.க. ராமர் கோவில் கட்டுவதை தேர்தல் பரப்புரையாக முன்னிலைப்படுத்தி, அதன்மூலம் வாக்கு வங்கியை விரிவுபடுத்தி, வகுப்புவாத அரசியலின் மூலம் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்து 12 ஆண்டுகளாக மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அதே ராமர் கோயிலில் வெளிவருகிற ஊழல் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. ராமபிரான் மீது அளவற்ற பக்தி கொண்டவர்கள் அவர் பெயராலே நடைபெறுகிற ஊழல் முறைகேடுகளைக் கண்டு அதன் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டு விடும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. ராமர் கோவில் நிர்வாகம் தனிப்பட்ட அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கே நடக்கிற முறைகேடுகளை அறிந்து கொள்ள பொதுமக்களுக்கு வாய்ப்பில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தகவல் அளிக்க முடியாது என உள்துறை அமைச்சகம் மறுத்து விட்டது. ஏனெனில் அதுவொரு தனியார் அறக்கட்டளை என்று கூறி விட்டது. எனவே, பொதுமக்கள் நன்கொடையின் மூலம் கட்டப்பட்ட ராமர் கோவிலில் நடப்பதை அறிந்து கொள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக பொதுமக்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. நாட்டு மக்களையே மிகுந்த கவலைக்குள்ளாக்குகிற வகையில் பா.ஜ.க., சங்பரிவாரங்கள் மேற்கொண்ட இந்த கூட்டுக் கொள்ளை குறித்து உச்சநீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இச்செயற்குழு ஒன்றிய பா.ஜ.க. அரசை கேட்டுக் கொள்கிறது.


தீர்மானம் : 6
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயருகிற போது அதை பொதுமக்கள் மீது சுமத்தாமல் இருக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டத்தை ஈடுகட்ட மானியம் வழங்கப்பட்டு வந்தது. பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் அந்த மானியம் ரத்து செய்யப்பட்டு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகிற பா.ஜ.க. அரசு, கச்சா எண்ணெய் விலை குறையும் போது விலையை குறைப்பதில்லை. அதன்மூலம் வருவாயை பெருக்கிக் கொள்ள கலால் வரியை விதித்து ஏறத்தாழ 12 ஆண்டுகாலத்தில் 25 லட்சம் கோடி ரூபாய் வசூலித்து அரசு கஜானாவை நிரப்பிக் கொண்டது. இதன்மூலம் மக்கள் மீது தொடர்ந்து சுமை ஏற்றப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விலையை குறைக்கிற போது அதற்கு இணையாக தனியார் எண்ணெய் நிறுவனங்கள் விலையை குறைப்பதில்லை. இதனால் தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றன. இதனை உடனடியாக தடுக்கின்ற வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இச்செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.


தீர்மானம் : 7

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சி காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பு, 2018 உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றுக்கு எதிரானது மட்டுமல்ல, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகும். இதன்படி, தமிழகத்தின் அனுமதியில்லாமல் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி. அவர்கள் கூறியதை இக்கூட்டம் வரவேற்கிறது, பாராட்டுகிறது. எனவே, காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுகிற முயற்சிகளை தமிழ்நாடு காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து குரல் கொடுக்கும், போராடும் என்பதை இக்கூட்டம் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.