இந்தி விவகாரத்தில் பா.ஜ.க.வினர் முன்னுக்கு பின் முரணாக பேசி வருகின்றனர் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முறை திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதற்கு காங்கிரஸ்
கட்சி சார்பில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள்
தலைவர்கள் கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு
உள்ளிட்டோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து
தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, ”இரண்டாவது முறையாக திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி சார்பாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாகவும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம். ஸ்டாலின் சிறந்த இடத்தை அடைந்திருக்கிறார். அவருடைய உழைப்பாலும் திறமையாலும் அந்த இடத்துக்கு வந்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை இந்தியை திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்ப்பது நாடகம் எனவும், அப்படி என்றால் காங்கிரஸ் உடன் எப்படி கூட்டணி வைக்கலாம் எனவும்
கேட்கிறார். காங்கிரஸ் கட்சி ஒரு காலத்திலும் இந்தி திணைப்பை ஆதரித்தது கிடையாது. நேரு, இந்தி பேசாத மக்களுக்காக, ஆங்கிலம் ஆட்சி மொழியாகவும் பயிற்று
மொழியாகவும் இருக்கும் என உத்தரவாதம் தந்தார். ஒரு காலத்திலும் அமித்ஷா போன்று மோடி போன்று எல்லா இடங்களிலும் இந்தி இருக்க வேண்டும் என ஜவஹர்லால் நேரு சொல்லவில்லை. காங்கிரஸ் கட்சியின் கொள்கையும் அது அல்ல.
ஐபிஎஸ் முடிக்கிற வரை இந்தி தெரியாது என அண்ணாமலை சொன்னார். அதுதான் நேருவின் பெருமை. அமித்ஷா சொல்வது போல் இருந்திருந்தால் அண்ணாமலையால் உயர்கல்வி கற்றிருக்க முடியாது. இந்தி விவகாரத்தில் முன்னுக்குப் பின் முரணாக தமிழக பாஜக பேசுகிறார்கள். அவர்கள் வரலாற்றை பின்னோக்கி பார்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.