சிதம்பரம் நடராஜர் கோயிலில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், நேற்று சாமி தரிசனம் செய்தார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலுங்கானா மாநில ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் நேற்றிரவு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்தார். அப்போது
கோயில் தீட்சிதர்கள் அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர். பின்னர் கனகசபையின்
மேலே ஏற்றி அவர் சாமி தரிசனம் செய்தார். நடராஜரை வழிபட்ட பிறகு அவருக்கு
கோயில் தீட்சிதர்கள் பிரசாதம் வழங்கினர்.
இதையடுத்து கோயிலை விட்டு வெளியே வந்த டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நடராஜர் கோயிலுக்கு வருகை புரிந்து நடராஜரை தரிசனம் செய்தது மகிழ்ச்சி. அதுவும் நடராஜரை அருகில் நின்று தரிசனம் செய்தது மிக்க மகிழ்ச்சி. நடராஜர் அனைவருக்கும் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். அலை அலையாக பொதுமக்கள் கோயிலுக்கு வர வேண்டுமே தவிர, கொரோனா அலை வரக்கூடாது என பிரார்த்தனை செய்தேன்” என்றார்.
கோயில் விவகாரம் குறித்து பிரதமருக்கு தீட்சிதர்கள் அனுப்பிய கடிதம் குறித்து கேட்டதற்கு பதிலளித்த அவர், “பிரதமருக்கு யார் வேண்டுமானாலும் கடிதம் அனுப்பலாம். அது அவர்களது உரிமை” என்றார்.
இதையும் படியுங்கள்: ‘தீட்சிதர்களிடமே கோவில் நிர்வாகம் இருக்க வேண்டும்’ – வி.கே.சசிகலா
கோயில் விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வந்தது
குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், நான்
பக்கத்து மாநில ஆளுநர். அதனால் இந்த அரசாங்கம் குறித்து கருத்து சொல்ல
விரும்பவில்லை என தெரிவித்தார்.
முன்னதாக, காரைக்காலில் உள்ள ஆயிரம் காளியம்மன் கோயிலில் தமிழிசை சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வருகின்றனர். இந்தக் கோயிலில் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத் துறையினர் கோயிலுக்கு கடந்த இரண்டு நாட்களாகச் சென்றனர். எனினும், அவர்களின் ஆய்வுக்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒத்துழைக்க மறுத்தனர்.
-மணிகண்டன்








