நெல்லை அருகே ரம்மி சீட்டு விளையாட்டால் ஏற்பட்ட கடன் தொல்லையால் காவல்நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு ஒருவர் விஷம் குடித்து உயிரிழப்புக்கு முயன்றுள்ளார்.
நெல்லை மாவட்டம் பழவூர் அருகேயுள்ள மாடன்பிள்ளைதர்மத்தை சேர்ந்தவர் ரவி செல்வன் (வயது 40). இவர் கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் உள்ள காவல்நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ரவிசெல்வனுக்கு ரம்மி விளையாட்டு மற்றும் குடிபோதையில் மிகுந்த ஆர்வம் உண்டு என கூறப்படுகிறது. இதனால் அவர் சரிவர வேலைக்கு செல்லாமல் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். மேலும் அக்கம் பக்கத்தினரிடையே லட்சக்கணக்கில் கடன் வாங்கி விளையாட்டும், குடியும் என இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே, ரம்மி விளையாட்டின் போது தன் பணத்தை முழுவதுமாக இழந்த ரவிசெல்வன் மன உளைச்சலில் இருந்துள்ளார். பின்னர் கடன் தொல்லை அவருக்கு அதிகமாகவே அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று மது குடித்துள்ளார். அப்போது மதுவில் விஷம் கலந்து குடித்ததால் மயங்கி விழுந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் பார்த்து ரவியின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் விரைந்து வந்த அவர்கள் ரவிசெல்வனை மீட்டு லெவிஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரவிசெல்வனுக்கு உஷா என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், அவர் விஷம் குடித்து உயிரிழப்புக்கு முயன்றது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரம்மி விளையாட்டால் அண்மை காலமாக அதிகமான உயிர்கள் பறிபோய் கொண்டு வருகிறது. இதனை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– இரா.நம்பிராஜன்