சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறை விசாரணை குழு ஆய்வை தொடங்கிய நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி கணக்கு விவரங்களை அதிகாரிகளிடம் வழங்க தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து
வருகின்றனர். இந்த கோயிலின் வரவு-செலவு கணக்குகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான குழுவினர் இன்றும், நாளையும் ஆய்வு செய்ய இருந்தனர். இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அதில், அறநிலையத்துறையினர் ஆய்வின்போது 2014 முதல் இதுவரையிலான வரவு, செலவு கணக்குகள் மற்றும் தணிக்கை அறிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் குறித்தான விவரங்கள், அவற்றுக்கான தொல்லியல்துறை கருத்துரு, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி விவரம்,
மதிப்பீடு விவரங்களும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும்
தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்விற்கு சிதம்பரம் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தரப்பில் நோட்டிசும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொள்ள நடராஜர் கோயிலுக்கு வருகை புரிந்தனர். அவர்களை கோவில் தீட்சிதர்கள் வரவேற்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து ஆவணங்கள் பற்றிய ஆய்வு மேற்கொள்ள தொடங்கிய போது பொது தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகரன் உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காண்பித்து ஆய்வை தடுத்து நிறுத்தினர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி கணக்கு விவரங்களை
அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வழங்க தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்ததால் அங்கு
பரபரப்பு ஏற்பட்டது.
– இரா.நம்பிராஜன்