காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமார் 3.1 கிமீ உயரத்தில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து கேரள கடலோர பகுதிகள் வரை ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு, நீலகிரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.