தமாகாவின் தேர்தல் அறிக்கை, தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் நல்ல சூழலை ஏற்படுத்தும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை, அக்கட்சி தலைவர் ஜி.கே. வாசன், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெளியிட்டார். அதனை தொடர்ந்து பரப்புரை சிடி மற்றும் சுற்றுப்பயணத்தின் விவரத்தையும் அவர் வெளியிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. வாசன், மத்திய – மாநில அரசுகளின் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். மேலும், ஆண்டுதோறும் மாமனிதர்களை போற்றும் வகையில் வழங்கப்படும் பல விருதுகளில் காந்தி பெயரிலும் ஒரு விருது அறிவிக்க மாநில அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 65 வயது மேற்பட்ட மகளிருக்கு இலவச பேருந்து அட்டை வழங்கப்படும் என்றும், அன்றாட வருவாய் எதிர்பார்க்கும் சலவைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட கூலித் தொழிலாளர்களுக்கு 50 விழுக்காடு மானியத்தில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இருசக்கர வாகனம் ஓட்டுவதில் பயிற்சி தந்து பள்ளியிலேயே உரிமம் பெறும் முறையை நடைமுறைப்படுத்துவோம் எனக் குறிப்பிட்ட வாசன், அனைத்து துறைகளிலும் இந்த தேர்தல் அறிக்கையானது நல்ல சூழலை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார்.