பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் 24-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் தமிழக வீராங்கனை தனலட்சுமி 200 மீட்டர் தூரத்தை 23.26 விநாடிகளில் கடந்து பி.டி உஷா, ஹீமா தாஸ் ஆகியோரின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.
24-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 4-வது நாளான நேற்று பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டம் நடைபெற்றது. அதில் தமிழகம் சார்பில் தனலட்சுமி கலந்துகொண்டார். இப்போட்டியில் 200 மீட்டர் தூரத்தை 23.26 விநாடிகளில் கடந்து தனலட்சுமி சாதனைப்படைத்துள்ளார். 23 வருடங்களுக்கு முன் இதே தூரத்தைப் பிரபல முன்னால் வீராங்கனை பி. டி உஷா 23.30 விநாடிகளில் கடந்து சாதனைப்படைத்திருந்தார். அதற்கு அடுத்தபடியாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹீமா தாஸ் 24.39 விநாடிகளில் கடந்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இந்த இரு முன்னணி வீராங்கனைகளின் சாதனையை தற்போது தமிழக வீராங்கனை தனலட்சுமி முறியடித்து சாதனைப்படைத்துள்ளார். அதேபோல் 100 மீட்டர் தடகள போட்டியில் ஒடிசாவை சேர்ந்த வீராங்கனை டூட்டி சந்தை வீழ்த்தி முதலிடம் பிடித்தார். 100 மீட்டர் தடகள போட்டியில் டூட்டி சந்தை பின்னுக்குத் தள்ளி தனலட்சுமி வெற்றிபெற்றார். அப்போது தனலட்சுமி தன்னுடைய காலணியைக் கழற்றி தடகள ஓடு பாதையில் அமர்ந்து கடவுளுக்கும், மறைந்த தன்னுடைய தந்தைக்கும் நன்றி கூறி தருணம் பார்வையாளர்களை நெகிழ்ச்சியடைச் செய்தது.