திருச்செந்தூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு – உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவின் போது அனைத்து நிகழ்வுகளும் தமிழிலேயே நடைபெறும் என அரசு தரப்பு தகவலை அறிக்கையாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த வியனரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலின் குடமுழுக்கு ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ் கடவுளான முருகன் கோயிலின் குடமுழுக்கை தமிழ் மொழியில் நடத்த கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை. எனவே திருச்செந்தூர் முருகன் கோயிலின் குடமுழுக்கு விழாவை தமிழ் மொழியில் மந்திரங்களை ஓதி நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி கோவில் குடமுழுக்கு நிகழ்வுகள் தமிழில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார். கோவில் தரப்பில், “யாகசாலையில் மந்திரங்கள் ஓதுவது தொடங்கி, திருமுறை பாடுவது, திருப்புகழ் பாடுவது, 64 ஓதுவார்கள் பூஜை செய்வது ஆகிய நிகழ்வுகள் தமிழிலேயே நடைபெற உள்ளன” என தெரிவிக்கப்பட்டது.

அதனை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளோடு சேர்த்து, இந்த வழக்கை பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.