துணை வேந்தர் நியமன மசோதா : உயர்நீதிமன்றத்தின் இடைகாலத் தடையை நீக்க வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்

உச்ச நீதிமன்றத்தில் துணை வேந்தர் நியமன மசோதா தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை ஆளுநருக்குப் பதில், மாநில அரசே நியமிக்கும் மசோதா தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் தரப்பில் ஒப்புதல் வழங்கபடாமல் இருந்தது.

இதனையடுத்து இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்து உத்தரவிட்டது. மேலும் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்த 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே தனது தனி அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியது.

இதனிடையே, துணைவேந்தர் நியமனம் தொடர்பான சட்டத்தை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டது. இது பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு எதிராக இருப்பதாக வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு தடைவிதித்தது.

இதனை எதிர்த்து தமிழ்நாடு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி சூரியகாந்த் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு தரப்பில், தமிழ்நாடு அரசின் வாதங்களை கேட்காமலேயே பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களை நியமிக்கும் சட்டத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் 14 பல்கலைக்கழகங்களில் இன்று துணை வேந்தர்களை நியமிக்க முடியவில்லை என்று வாதிடப்பட்டது.

மத்திய அரசு தரப்பில், குடியரசுத் தலைவரின் கேள்வி வழக்கில் முடிவு வெளியான பிறகு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

உடனடியாக தமிழ்நாடு தரப்பில், இந்த வழக்கத்திற்கும் குடியரசுத் தலைவர் கேள்வி வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தடையை உடனடியாக நீக்கி உத்தரவிட வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் வழக்கு விசாரணை டிசம்பர் 2ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.