அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தினார்.
இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் வரை பணியமர்த்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட அக்னிபாத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், அந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது. ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டத்தில் வன்முறையும் ஏற்பட்டது.
தெலங்கானாவில் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட வன்முறையில் ரயிலுக்குத் தீ வைக்கப்பட்டது. அப்போது ரயில்வே போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தத் திட்டத்தை திரும்பப் பெறுமாறு காங்கிரஸ் கட்சி கோரிக்கை முன்வைத்துள்ளது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி எம்.பி.யான சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், “உச்சபட்ச தியாகத்தை கோரும் இராணுவ பணியினை எந்தவித வேலை பாதுகாப்பும் இல்லாமல் மேற்கொள்ள இளைஞர்களை அழைப்பது பெருங்குற்றம். தேசத்தின் பாதுகாப்பையும், இராணுவத்தின் தீரத்தையும் ஒரு சேர அவமதிக்கும் “அக்னிபாத்” திட்டத்தை திரும்பபெறுக” என்று குறிப்பிட்டுள்ளார்.
-மணிகண்டன்








