தமிழ்நாட்டிற்கு வருகைதரும் பிரதமர் மோடியின் மனதில் இடம் பிடிப்பது எப்படி என்பதை கற்றுத்தருகின்றனர் மதுரை மாநகர மாவட்ட பாஜக நிர்வாகிகள். மதுரைகாரங்க வால்போஸ்டர் என்றாலே, அதில் கொஞ்சம் துடுக்கும், வில்லங்கமும் இருக்கும் என்பது அரசியலை உற்றுநோக்குவோர் அறிந்த ரகசியமே. இப்ப மதுரை மாநகர பாஜகவினர் மோடியை வரவேற்க அடித்த போஸ்டரும், டி சர்ட்டும்தான் மதுரை மாவட்ட அரசியல்களத்தை சூடாக்கி உள்ளது.
பிரதமர் மோடி வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட வேண்டும் என பாஜகவினர் தமிழ்நாடு முழுவதும் வால்போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டரை அச்சிட்ட அக்கட்சியின் மதுரை மாநகர மாவட்ட தலைவர் டாக்டர் சரவணிடம் பேசினோம். அவர் கூறியதாவது, ‘காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் போட்டியிடும்போது, எங்கள் பிரதமர் மோடி மதுரையில் போட்டியிடக்கூடாது என எடுத்த எடுப்பிலேயே கேள்வியாக பதில் அளித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் பாஜக காலுன்ற முடியாது என எதிர்கட்சிகள் கூறி வந்தனர். அந்த கூற்றை கடந்த சட்டமன்றத் தேர்தலில் உடைத்தெறிந்தோம். மேற்கு மண்டலத்தில் வென்றது பெரிய விஷயமல்ல. அங்கு நாங்கள் எப்போதுமே ஸ்டாரங்குதான். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றது. இந்த ரிக்கார்டை கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முறியடித்தோம். இரண்டு திமுக வேட்பாளர்களை எதிர்த்து வென்றுள்ளோம். அந்த வரிசையில் உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்து நின்ற கணிசமான வாக்குகளை பெற்றுள்ளோம். இப்படியே எங்கள் வெற்றி கணக்கு தொடரும் என்றார்.
மோடி மதுரை தொகுதியில் நின்றால் மண்ணை கவ்வுவார் என கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, ‘ மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 5 தொகுதிகளில் மட்டுமே திமுக கூட்டணி வென்றது என்ற வரலாற்றை மறைத்துவிட்டு பேசக்கூடாது. சோசியல் மீடியாவில் எழுதுபவர்கள் எல்லாம் மதுரை மக்கள் அல்ல. பிரதமர் மோடி கண்டிப்பாக மதுரையில் வெல்வார், ஏனெனில் வாரணாசி போல் மதுரையும் ஒரு ஆன்மீக பூமிதான் என சூடாக பதில் அளித்தார்.
டாக்டர் சரவணன் மோடியை வரவேற்க போஸ்டர் மட்டும் அடித்து அரசியல் களத்தை சூடாக்கவில்லை. போஸ்டரில் என்ன வாசகங்கள் உள்ளனவோ, அதே வாசகங்களுடன் கூடிய 500 டி-சர்டும் அடித்துள்ளார். இவர்கள் இன்று சென்னைக்கு வருகை தரும் மோடியை வரவேற்க, அவர் செல்லும் வழிநெடுகிலும் நின்று வரவேற்பார்கள் எனத் தெரிகிறது. பிரதமர் மதுரையில் நிற்கிறாரோ ? இல்லையோ ? டாக்டர் சரவணன் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் நிற்க தன்னை தயார்படுத்தி வருகிறார் என தாமரையின் சொந்தங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர்.








