சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஆகாஷ் என்ற இளைஞரை போலீசார் ஒரு வழக்கில் கைது செய்தபோது காலில் காயம் ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து ஆகாஷ் விசாரணையின் போது அடித்துக் கொன்றதாக கூறி, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது வழக்குப்பதிய கோரி ஆகாஷின் தந்தை ராஜேஷ்கண்ணன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். ஆகாஷின் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்த உடலை வாங்க மறுத்து 100 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ‘‘இறப்புக்கு பின்பும் மனித கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும். மதுரை ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், அரசு மருத்துவமனை முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகள், ஆகாஷின் உடலுக்கு சட்டப்படி உடனே இறுதிச்சடங்கு நடத்த வேண்டும். இதனால், சிபிசிஐடி விசாரணை எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது. சட்டப்படி விரைவாக விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் சிறிது நேரம் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு, அவர்களது முன்னிலையில் மதுரை தத்தனேரி மின்மயானத்தில் ஆகாஷின் உடல் தகனம் செய்யப்பட்டது.




