களைகட்டும் ஈரோடு இடைத்தேர்தல்; ஜிலேபி, முறுக்கு, தோசை சுட்டு தலைவர்கள் பிரச்சாரம்

ஈரோடு  கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. ஜிலேபி, முறுக்கு மற்றும் தோசை சுட்டு தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக  இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி…

ஈரோடு  கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. ஜிலேபி, முறுக்கு மற்றும் தோசை சுட்டு தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக  இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில்  ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு  தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது.

மொத்தமாக 121 வேட்பாளர்கள் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 75 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. காங்கிரசின் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுகவின் தென்னரசு, தேமுதிகவின் ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா உள்ளிட்ட  80 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. டிடிவின் தினகரன் தரப்பு வேட்பாளர் உள்ளிட்டோர் வாபஸ் பெற்றதால் 75 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

ஈரோடு கிழக்கு தொகுதியில்  238 வாக்குச்சாவடிகள் உள்ளன. மொத்தம் 2,26,876 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் – 1,10,713, பெண்கள் – 1,16,140, மூன்றாம் பாலினத்தவர் – 23 பேர். இந்த தேர்தலில் 500 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும்,  ஈரோடு நகராட்சி ஆணையர்தான் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும்  தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு  தெரிவித்தார்.

இடைத்தேர்தலில்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக உள்ளூர் போலீசார் மட்டுமின்றி இரண்டு கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவ படையைச் சேர்ந்த 400 வீரர்கள் இன்று (13-02-2023) ஈரோடு வர உள்ளனர்.  வாக்குப்பதிவு நாள் முதல் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு பரிசீலினை, நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியல் ஆகியவை வெளியான நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக வேட்பாளரான கே.எஸ்.தென்னரசு தோசை சுட்டு தனது பிரச்சாரத்தை துவங்கினார். அதேபோல திமுகவின் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஜிலேபி சுட்டும், முறுக்குகளை விற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

திமுக வின் சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி, கொங்கு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். அதேபோல அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், மா.பா.பாண்டியராஜன் ஆகியோர் வேட்பாளர் தென்னரசை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

யாழன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.