பயிர் சேதங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கை விரைவில் தாக்கல்: மத்திய ஆய்வு குழு

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பயிர் சேதங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையை கூடிய விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக மத்திய ஆய்வு குழு தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மாதம் கடைசி வாரத்திலும், இம்மாதம்…

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பயிர் சேதங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையை கூடிய விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக மத்திய ஆய்வு குழு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் கடைசி வாரத்திலும், இம்மாதம் முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கனமழையால் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த நெற்பயிர் உள்ளிட்ட பயிர்களை மழை நீர் சூழ்ந்து, சேதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட நெல்பயிர்களை கொள்முதல் செய்வதற்கு 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.

இதன் தொடர்ச்சியாக சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு சார்பில் இரண்டு குழுவினர் டெல்டா மாவட்டங்களுக்கு வருகை தந்து கடந்த மூன்று தினங்களாக நாகை, திருவாரூர் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.

முதல் நாளான பிப் 8-ஆம் தேதி அன்று நாகை மாவட்ட பகுதியில் ஆய்வு செய்தனர். இரண்டாவது நாளான நேற்று தஞ்சாவூர் பகுதியில் ஆய்வு செய்த மூன்று பேர் அடங்கிய மத்திய குழுவினர், தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் ரிஷியூர், அரிச்சபுரம், நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்து நெல் மணிகளை சேகரித்து சென்றனர்.

ஈரப்பதம் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்த மத்திய குழுவினர் பின்னர் துண்டகட்டளை, முதல் சேத்தி கிராமத்தில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

இந்த நிலையில் மூன்றாவது நாளான இன்று, புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, வேளாண் துறை அதிகாரிகள் ஆகியோர் உடன் சென்றனர்.

இந்த ஆய்வின் போது நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்களை எடுத்து ஈரப்பதம் எவ்வாறு உள்ளது என்பது குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். பெருங்குளூரில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் நெல்லில் 19.8% ஈரப்பதம் உள்ளது கண்டறியப்பட்டு, அந்த நெல் மணிகளை சேகரித்து மத்திய குழுவினர் சென்றனர்.

இதன் பின்னர் பெருங்களூரை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டை மற்றும் கரம்பக்குடி ஆகிய பகுதிகளுக்கும் மத்திய குழு சென்று அங்கும் ஆய்வு செய்து வருகிறது. மேலும் இந்த ஆய்வை முடித்துக்கொண்டு பேசிய மத்திய குழு விரைவில் டெல்லி சென்று மத்திய அரசிடம் பயிர் சேதங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளதாக கூறியுள்ளனர்.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.