ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 321 ரன்கள் அடித்து இந்தியா வலுவான நிலையில் உள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பிறகு களமிறங்கிய இந்தியா அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. முதல்நாள் முடிவில் 77 ரன்கள் எடுத்து 1 விக்கெட்டை இழந்திருந்தது. ரோஹித் சர்மா அரைசதத்துடன் களத்தில் இருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. ரோஹித் சர்மாவுடன் அஸ்வின் கைகோர்த்தார். இருப்பினும் 23 ரன்கள் எடுத்திருந்த போது முர்பி வீசிய பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பிறகு வந்த புஜாரா, விராட் கோலியும் முர்பி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அவுட் ஆகினர். மற்றொரு முனையில் ரோஹித் சர்மா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா சதமடித்தார். 171 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து தனது சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் கேப்டனாக மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். மறுமுனையில் ஜடேஜா நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். ரோஹித் சர்மா – ஜடேஜா பார்ட்னர்ஷிப் 50 ரன்களை கடந்தது.
அண்மைச் செய்தி:’356-ஐ தவறாக பயன்படுத்தி இருந்தால் அன்றைக்கே மக்கள் தண்டித்திருப்பார்கள்’ – மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி
120 ரன்கள் அடித்திருந்த நிலையில் கம்மின்ஸ் வீசிய பந்தில் போல்டாகி ரோஹித் சர்மா வெளியேறினார். பின்பு வந்த பரத்தும் சொற்ப ரன்னில் அவுட் ஆனார். ஆனால், அதன்பிறகு ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த அக்சர் படேல் தனது திறைமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் அரைசதம் அடித்து தற்போது களத்தில் உள்ளனர். இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இந்தியா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்கள் எடுத்துள்ளது.