மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு ரூ.4,466 கோடி வரிப்பகிர்வு !

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கிய மத்திய அரசு, 28 மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தமாக ரூ.1,09,019 கோடி வரிப்பகிர்வு செய்யப்பட்டுள்ளது.

செய்தியைக் கேட்க
AI குரல் வடிவம்
0:00 –:–

மத்திய அரசு வசூலிக்கும் வரி வருவாயில் ஒரு குறிப்பிட்ட பங்கு மாநில அரசுகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களுக்கான செலவினங்களை மேற்கொள்ள இந்த நிதி முக்கிய ஆதாரமாக உள்ளது. அந்த வகையில், பண்டிகைக் காலச் செலவினங்களைக் கருத்தில் கொண்டும், மாநிலங்களின் மூலதனச் செலவினங்களை அதிகரிக்கவும் மத்திய அரசு தற்போது கூடுதல் வரிப் பகிர்வு நிதியை விடுவித்துள்ளது.

மாநிலங்களுக்கு ரூ.1,09,019 கோடி!

மத்திய அரசு அக்டோபர் 31ஆம் தேதி அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ.1,09,019 கோடி வரிப் பகிர்வு நிதியை விடுவித்துள்ளது. இது மாநிலங்களுக்கு வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் வரிப் பகிர்வு நிதிக்கு கூடுதலாக வழங்கப்படும் தொகையாகும். நடப்பு நிதியாண்டில் வழங்கப்படும் இரண்டாவது கூடுதல் தவணை இதுவாகும். வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மாநிலங்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்தவும், வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களுக்கான செலவுகளை மேற்கொள்ளவும் இந்த நிதி உதவும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதிக நிதி பெற்ற முதல் 5 மாநிலங்கள்!

இந்த கூடுதல் வரிப் பகிர்வில் அதிக நிதி பெற்ற மாநிலங்களின் பட்டியலில் உத்திரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

  1. உத்தரப் பிரதேசம் – ரூ.19,208 கோடி
  2. பீகார் – ரூ.10,845 கோடி
  3. மத்தியப் பிரதேசம் – ரூ.8,010 கோடி
  4. மேற்கு வங்கம் – ரூ.7,866 கோடி
  5. மகாராஷ்டிரா – ரூ.7,022 கோடி

தமிழகத்திற்கு ரூ.4,466 கோடி!

இந்த வரிப் பகிர்வில் தமிழ்நாட்டிற்கு ரூ.4,466 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களான ஆந்திரப் பிரதேசத்திற்கு ரூ.4,597 கோடியும், கர்நாடகாவிற்கு ரூ.4,504 கோடியும், கேரளாவிற்கு ரூ.2,597 கோடியும், தெலங்கானாவிற்கு ரூ.2,370 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. 28 மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ.1,09,019 கோடி கூடுதல் வரிப் பகிர்வு நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.