பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் கூறியிருப்பதாவது, “1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட IDBI வங்கியை, 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த உங்கள் காங்கிரஸ்
கட்சி, தனது சுயலாபத்திற்காக சுரண்டி தின்றது என்பதுதான் வரலாறு.
அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சியில் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த கிங்ஃபிஷர் உள்ளிட்ட பெரு நிறுவனங்களுக்கு விதிகளை மீறி அதிகளவிலான கடன்களை வழங்குமாறு, பொதுத்துறை வங்கிகளை காங்கிரஸ் கட்சி நிர்ப்பந்தித்ததன் விளைவாகவே, IDBI வங்கியின் மொத்தக் கடன்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி திரும்ப வராத வாராக்கடனாக மாறியது. IDBI வங்கி பெரும் நிதியிழப்பையும் சந்தித்தது.
ஆனால், நமது மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு, ரூ.25 ஆயிரம் கோடி மறுமுதலீடு செய்து அந்த வங்கியை மீட்டெடுத்தது. ‘ஊழல் கறைபடிந்த’ காங்கிரஸின் கரங்கள் இந்த உண்மைகளை மூடிமறைக்க முயன்றாலும், மக்கள் ஒருநாளும் மறக்கமாட்டார்கள்.
மேலும், UPA ஆட்சிக் காலத்தைப் போலல்லாமல், IDBI வங்கியின் மூலோபாய மறுசீரமைப்பு, விதிமுறைகளுக்கு உட்பட்டு முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதையும், அங்குள்ள ஊழியர்களின் பணி நிபந்தனைகளும் ஓய்வூதியப் பலன்களும் முழுமையாக பாதுகாக்கப்படும் என்பதையும் நமது மத்திய அரசு தெளிவுபடுத்தி விட்டது. அப்படியிருக்கையில், ‘வங்கியின் நலன்’ என்ற பெயரில் தற்போது நீங்கள் நடத்தும் விளம்பர நாடகம் ஒரு பைசாவிற்கு கூட பிரயோஜனமில்லாதது.
எனவே, அரசியல் ஆதாயத்திற்காக ரபேல் விவகாரம், வாக்கு திருட்டு என அடுத்தடுத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடுக்கி அம்பலப்படுவதை விட, ஆக்கப்பூர்வமான உத்திகளைக் கொண்டு ஆரோக்கியமான அரசியலில் ஈடுபடுங்கள் திரு. ராகுல் காந்தி அவர்களே!” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




